Wednesday, April 16, 2014

நடைமேடை இருக்கையில் ஒரு மணி நேரம்...

      நேற்று இரவு 10.05 மணிக்கு நான் பயணித்த கோவை-சேலம் பேருந்து சேலம் பேருந்து நிலையத்திற்குள் நுழைகிறது. என் அப்பாவிடம் இருந்து அலைபேசிக்கு அழைப்பு வருகிறது; "எங்கப்பா இருக்க?/ இப்பதான் பா சங்ககிரி தாண்டி இருக்கேன். முக்கா மணிநேரத்துள சேலம் வந்துடுவேன் பா./ சேரி பஸ் ஸ்டாண்டு வந்துட்டு ஃபோன் பண்ணு". அழைப்பைத் துண்டிக்க அடுத்து ஓர் அழைப்பு. கோகுலிடம் இருந்து; "கோகுல் எங்க இருக்க? பஸ் இப்பதான் பஸ் ஸ்டாண்டுகுள்ள நுழையுது
/ எக்ஸல் காலேஜ் கிட்ட டா/ ஓ சாப்பிட நிறுத்திட்டாங்களா? சாப்பிட்டுட்டு வந்திடு கோகுல்.../ உம் ம் ம்/ ஏன் டா?/ இல்ல டா சாப்பிடலா/ சேரி நீ வா, நா இங்கவே வெயிட் பன்றேன்".
     கோவையில்  நானும் அவனும் ஒன்றாகத் தான் பேருந்தில் ஏறினோம்; இப்போது நான் மட்டும் சேலத்தில் இறங்குகிறேன். என்னிடம் அவனுடைய உடமைகளையும் சேர்த்து மொத்தம் ஐந்து பொருட்கள்; இரண்டு மடிக்கணினி பைகள்; இரண்டு சூட்கேசுகள்; ஒரு டிராவல் பேக். இரண்டு நடையாக எல்லாத்தையும் பேருந்திலிருந்து இறக்கி வைத்துவிட்டு, அனைத்தையும் தூக்கிக் கொண்டு பக்கத்திலிருந்த நடைமேடையில் ஏறினேன்; பின்வரிசையின் ஐந்து நாற்காலிகளில் முதல் நாற்காலியில் என்னுடைய சூட்கேஸும் அவனுடைய டிராவல் பேக்கும் வைத்தேன்; மூன்றாவது நாற்காலியில் அவனுடைய சூட்கேஸும், மடிக்கணினி பையும் வைத்தேன்; நடுவில் நான் உட்கார எண்ணினேன். அருகில் ஒரு பெட்டிக்கடையைப் பார்த்ததும் டீ யாவது குடிக்கலாம் என எண்ணினேன்; டீ வாங்கப் போகும் சமயத்தில் பொருட்கள் திருடு போய்விட்டால்...? அதனால் என் மடிக்கணினி பையைக் கழட்டி மடியில் வைத்துக்கொண்டு அந்த நடு இருக்கையில் அமர்ந்தேன்.
     கோகுலும் நானும் கோவையில் பேருந்தில் ஏறிய போது தனித்தனி இருக்கைகளில் ஜன்னலோரமாக அமர்ந்து கொண்டோம். வண்டி கிளம்பிய சிறிது நேரத்திற்குள் "மலைச்சாமியோட ATM card என்கிட்ட இருக்குடா" என்றான். மலைச்சாமியும் ஊருக்குப் போகனும்ல. "நம்ம பசங்க யாரயாவது வர சொல்லி ATM card-அ கொடுக்க சொல்லிட்டு, அடுத்த பஸ்ல வர்றேன்; நீ சேலம் போய் வெயிட் பண்ணு" அப்படினு சொல்லிட்டு இறங்கிட்டான். நானும் சரினு சொல்லிட்டு வந்து கொண்டிருந்தேன்.
      உடல் மட்டும் தான் பயணிக்கிறது; மனம் கல்லூரியிலேயே தங்கிவிட்டது போல் கல்லூரியின் நினைவுகள் என் பேருந்தின் வேகத்தையும் மீறி என்னைத் துரத்தி வந்தன. விடுதியில் இருந்து கிளம்பும் வரை ஒன்றும் ஆகவில்லை; நானும் இந்த கல் நெஞ்சு கலங்காது என்றே நினைத்திருந்தேன்; ஆனால் எப்போது கிளம்புவதற்காக பையைத் தொட்டேனோ அப்போதே கலங்க ஆரம்பித்து விட்டது. பேருந்தில் ஏறும் வரை சந்தித்த ஒவ்வொரு நண்பர்களும் மனதிற்கு எடையைக் கூட்டிவிட்டனர்; எப்படியாவது சீக்கிரம் வெளியே சென்றுவிட வேண்டும்; இல்லையெனில் அழுதுவிடுவோமோ என்ற எண்ணத்துடனேயே நிறைய நண்பர்களிடம் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பிவிட்டேன்.
      காந்திபுரம் சென்றுகொண்டிருக்கும் போது... இந்த கல்லூரியில் நான் யாரிடமும் அதிகம் பழகியதே கிடையாது; எனக்குப் பிடித்த கல்வி விஷயத்தில் இக்கல்லூரியை எனக்கு சுத்தமாகப் பிடிக்காது; இருந்தும் எனக்குள் சோகம்; நன்றி கல்லூரியே! என் பள்ளிக்கூடங்கள் செய்யாததை இது நிகழ்த்தி விட்டது. காந்திபுரத்தில் இறங்கி வெளியேறும் போது "வருகைக்கு நன்றி; மீண்டும் வருக!" என்ற பலகையும் ஏதோ உறுத்தியது; சாலையில் உள்ள நடை மேம்பாலத்தின் மேல் இனி நடக்க முடியாதே என்ற எண்ணமும் என் நடையைத் தளரச் செய்தது. இந்த உணர்வுகள் என்னை வேறொருவனாக மாற்றின; இந்த ஊரை விட்டே சீக்கிரம் போக வேண்டும் எனத் தோன்றியது; எப்போதும், சேலம் செல்லும் பேருந்துகள் நிற்கும் இடத்தில், காலியாக நிற்கும் பேருந்தில் ஏறி செல்வது தான் பிடிக்கும்; ஆனால் நேற்றோ வெளியில் கிளம்பி வந்த பேருந்தில் அவசரமாக ஏறிக் கொண்டோம் நானும் கோகுலும்....
       இவ்வாறு நடந்ததை நினைத்துக் கொண்டே செல்லும்போது கோகுல் அழைத்தான். மணி 7.15. அவன் பேருந்தில் ஏறி விட்டதாகக் கூறினான். கல்லூரி வாழ்க்கையை அசைபோட்டுக் கொண்டே சென்றேன்; அப்படியே தூங்கியும் போனேன். விழித்தால் எக்ஸல் கல்லூரி எதிரே சாப்பிடுவதற்காக வண்டியை நிறுத்தி இருந்தார்கள். பசியும் இல்லை; சாப்பிடவும் தோனவில்லை. மீண்டும் கல்லூரி நினைவுகள் அசைபோடவே வந்து கொண்டிருந்தேன். பேருந்து நிலையத்தை நெருங்கும் போதுதான் உடைமைகள் மீது சிந்தனை வந்தது; கவனமாக எல்லா உடைமைகளையும் இறக்கி வைத்தேன்.
      சேலம் பேருந்து நிலையம், நடைமேடை இருக்கையில்...
      இப்பொழுது கல்லூரி பற்றிய சிந்தனை இல்லை; முழுக்க முழுக்க அந்த பைகளும் கோகுல் எப்போது வருவான் என்ற எண்ணமும் தான் இருந்தன. யாராவது சூட்கேஸையும் மடிக்கணினி பையையும் நோட்டமிடுகிறார்களா? என்ற ஐயத்துடனே அனைவரையும் சுற்றி முற்றி பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருந்தேன். திடீரென்று ஒரு சத்தம்- யாரோ ஒருவரை நான்கு நபர்கள் காலால் எட்டி உதைத்து அடித்துக் கொண்டிருந்தனர். அவர்களைத் தடுக்க எண்ணினேன்; ஆனால் நானோ ஒருவன்; அது மட்டுமில்லாமல் பைகள் வேறு இருக்கிறது. அப்படியே உட்கார்ந்து விட்டேன். நல்லவேளையாக கல்லூரி மாணவர்கள் சிலரும் பேருந்துநிலைய கடை ஊழியர்களும் அவர்களைத் தடுத்து நிறுத்தி மிரட்டி அனுப்பினர். அந்த அடி வாங்கிய நபரையும் அதன்பின் அந்த இடத்தில் காணவில்லை...
       சட்டென்று சில வசைச்சொற்கள்; குடித்து விட்டு ஏதோ உளறிக்கொண்டிருந்த கணவனிடம் அவள் மனைவி. குப்பைகள் பொருட்களைப் பொறுக்கி எடுத்து விற்று வாழும் குடும்பமாகத் தென்பட்டது; பிறகு அந்த அம்மா அவரது கணவரையும் எழுப்பிப் பைகளைத் தூக்கிக் கொண்டு கிளம்பிவிட்டார்...
       எனக்கு முன் வரிசை இருக்கையில் மூவர் அமர்ந்திருந்தனர்; அதில் ஒருவர் மட்டும் திரும்பி, "தம்பி, ஃபோன் பண்ணனும் பா"னு சொன்னார். முதலில் ஒரு தவறான எண்ணுக்கு அழைத்த பிறகு இரண்டாம் முறை சரியான எண்ணுக்கு அழைத்து அவரிடம் கொடுத்தேன். ஏதோ மாமன் உறவுமுறையில் பேசினார்; அவர் அலைபேசியை வைப்பதற்குள் அவரது மாமா வந்துவிட்டார். "ரொம்ப நன்றி தம்பி; வரேனுங்க" னு சொல்லிட்டு அந்த மூன்று நபர்களும் போய்விட்டனர்...
        அந்த இடத்தை நிரப்புவதற்கு ஒரு குடும்பம் வந்தது. அப்பா அம்மா இரு பெண் குழந்தைகள்; "சாப்பிட்டுட்டு பஸ் ஏறிடலாம்" என அந்த அப்பா சொல்ல, அம்மா தண்ணீர் எடுத்துக் கொடுத்து கை கழுவச் சொன்னார்; அவர்கள் கொண்டுவந்த பையிலிருந்து காகிதத் தட்டுகளை எடுத்து அதில் புளி சோற்றைப் போட்டு அனைவருக்கும் கொடுத்துவிட்டு தானும் சாப்பிட்டார்; இச்சமயம் எனக்கோ பசிக்க ஆரம்பித்து விட்டது. பசியோடு பக்கத்திலிருந்த கடையைப் பார்த்தேன்; அதன் சொந்தக்காரர் என்னையே முறைத்துக் கொண்டிருந்தார்; திரும்பிவிட்டேன். அந்த அப்பா தன் சிறிய மகளை கழிவறைக்கு அழைத்துச் சென்று விட்டு வந்தார்; அதற்குள் அந்த அம்மா அனைத்தையும் பைகளுக்குள் திரும்ப வைத்து கிளம்பத் தயாராக இருந்தார்; ஆளுக்கொரு பையைத் தூக்கிக்கொண்டு கிளம்பினார்கள் அனைவரும். அவர்கள் போனது திருப்பதிக்காக இருக்குமோ???....
       சற்றே திரும்பினேன்; எதிரே ஒரு தனியார் பேருந்து; அதைக் கழுவுவதற்காக ஒரு இளைஞன் பனியன் மற்றும் முழங்கால் வரை மடித்த ஜீன்ஸ் பேன்ட்டுடன் தண்ணீர் வாளியைத் தூக்கி வந்தான். தன்னுடைய அலைபேசியைப் பக்கத்திலிருந்த கடைக்காரரிடம் கொடுத்துவிட்டு பேருந்தைக் கழுவ ஆரம்பித்தான்; வண்டியின் முன்புற கண்ணாடிகளை தண்ணீர் ஊற்றியும் பின்பு ஈரத்துணியால் தண்ணீர் நனைத்து கைப்பிடிகளின் மேல் ஏறி அழகாகத் துடைத்தான். துடைத்துக் கொண்டிருக்கும் போதே அந்த கடைகாரனிடம், "நெட்டுக்கு(INTERNET) போயிடப் போறண்ணா... காசு போயிடும்"னு சொல்லிக் கொண்டே துடைத்தான்.
       இடது புறம் சத்தம் கேட்டு திரும்பினேன்; அங்கே மீண்டும் ஒரு குடும்பம்; கணவன் மனைவி மட்டும் தான்; அவர்களும் காகிதம் பொறுக்கி விற்கும் தொழிலாளிகள் என்றே நினைக்க முடிந்தது. அவர்கள் இருவரும் ஏதோ பேசிக் கொண்டே இருந்தார்கள்; அவர்கள் இருவரையும் காவி உடை அணிந்த ஒருவர் பார்த்துக் கொண்டே இருந்தார்; சற்று நேரத்தில் இன்னொரு காவி காரர் அவர்கள் அருகில் வந்து நின்றார். அந்த அம்மா அவரிடம் "மணி என்ன?" என்றது. "10.30" என்றார் காவி காரர். "பத்தரை ஆச்சா... சாப்பிட்டு வரேன்" என்றார். "சீக்கிரம் சாப்பிட்டுட்டு வரனும்" னு சொல்லிட்டு அவர் நகர்ந்தார். அவர்களிருவரும் பிளாஸ்டிக் பைகளில் சேர்த்து வைத்திருந்த உணவை சாப்பிடத் தொடங்கினர்...
      அதே சமயத்தில் பேருந்தைத் துடைத்துக் கொண்டிருந்த இளைஞன் பக்கவாட்டு கண்ணாடிகளைத் துடைத்து விட்டு மீண்டும் இரண்டாம் முறை முன் கண்ணாடியைத் தண்ணீர் ஊற்றி கழுவி விட்டுத் துணியால் துடைத்துக் கொண்டிருந்தான்...
      சாப்பிட்டுக் கொண்டிருந்த இருவரும் முடிக்கும் தருவாயில் இருந்தனர்; இன்னமும் அந்த காவி காரர் அவர்களைப் பார்த்தபடியே வேறு ஓர் இடத்தில் நின்றிருந்தார். கணவனும் மனைவியும் சாப்பிட்டு விட்டு பேசத் தொடங்கினார்கள்...
        அந்த இளைஞன் மூன்றாம் முறை முன் கண்ணாடியை துடைத்துக் கொண்டிருந்தான். அருகில் இருந்த கடைக்காரர் கடைக்குப் பக்கத்திலேயே ஏதோ ஓர் மூட்டையால் தலையணை அமைத்தும் அட்டைகளால் படுக்கையை அமைத்தும் அதன்மேல் படுத்துக் கொண்டார்; காலி குளிர்பான பாட்டில் ஒன்றில் ஒரு சுருள் கொசுவர்த்தி எரிந்து கொண்டிருந்தது; கடையில் வேறு ஒரு நபர் நின்று கொண்டிருந்தார்...
       அந்த காவி காரரை இப்போது காணவில்லை. அந்த கணவனும் மனைவியும் அங்கேயே தூங்குவதற்காக போர்வைகளை விரித்தனர். படுத்துக் கொண்டபின்பும் பேசிக் கொண்டே இருந்தனர்...
       அந்த இளைஞன் இப்போது தன் அலைபேசியில் அந்த வண்டியின் மிகப்பை புகைப்படம் எடுத்தான். திருப்தி வரவில்லை போல; மீண்டும் ஒரு வாளி தண்ணீரை எடுத்து வந்து ஊற்றி துடைக்க ஆரம்பித்தான். அவன் துடைத்துக் கொண்டிருக்கும் போதே இரு வேஷ்டி கட்டிய மனிதர்கள் அவனைக் கடந்து சென்றனர்; போகும்போது, "ம்ம்ம்... நல்லா துடைக்கனும்.... ஹும்..." னு சொல்லிட்டு போனார் அவர்களில் ஒருவர். அந்த இளைஞன் அவர்களை முறைத்துக் கொண்டே துடைத்துக் கொண்டிருந்தான்...
       இப்போது இரண்டு காவலர்கள் நடைமேடையில் நடந்து வந்து கொண்டிருந்தனர். "எங்கே போகனும்?" என்றார் ஒருவர். "வீட்டுக்குத் தான் சார். ஃப்ரெண்ட் வந்துட்டு இருக்கான்" னு சொன்னேன். "இவ்வளவு லக்கேஜும் உன்னோடதா?" என்றார். ஆமாம் என தலையாட்டினேன். "ஃப்ரெண்ட் வர வரை பத்திரமா பாத்துக்கோ, விட்றப்போற" னு சொல்லிட்டு நகர்ந்தார். பக்கத்தில் படுத்திருந்தவர்களை தடியால் தட்டி எழுப்பி விட்டார். "தெரு பொறுக்கி நாயே, உனக்கு பஸ் ஸ்டாண்டுல தூக்கம் கேட்குதா?" என மிரட்டினார். "இதோ கிளம்புறோம் சார்" னு சொல்லிட்டு அந்த அம்மா எழுந்தாங்க. "இடத்த காலி பண்ணு" னு சொல்லிட்டு நகர்ந்தனர் அவர்கள். அந்த அம்மா மட்டும் எழுந்து எங்கோ நடந்து சென்றார். அவரது கணவர் மட்டும் அங்கேயே படுத்து இருந்தார்...
       எனக்கு அப்பாவிடம் இருந்து அழப்பு. மணி 11 ஆகி இருந்தது; "எங்க இருக்க?/ வந்துட்டேன் பா; இப்பதான் பஸ் ஸ்டாண்டுல இறங்குறேன்/ சேரி, நா பழைய பஸ் ஸ்டாண்டு வரட்டுமா? / இல்லப்பா. ஃப்ரெண்ட்-அ பஸ் ஏத்திவிட்டுட்டு தான் வரனும். நா பழைய பஸ் ஸ்டாண்டுக்கு பஸ் ஏறின அப்புறம் சோல்றேன் பா/ சேரி". நான் கோகுலுக்கு அழைத்தேன். இரண்டு அழைப்புகளுக்குப் பிறகு மூன்றாவது அழைப்பில் "சிசு ஹாஸ்பிடல் தாண்டிட்டேன் டா" என்றான். "என்ன தூங்கிட்டியா?/ ஆமா. ஏன்/ ஃபோன் இரண்டு முறை பண்ணி அட்டென்ட் பண்ணவே இல்ல அதான்; சேரி வா"
      இதற்குள் அந்த இளைஞன் பேருந்திற்குள் ஏறி உள்பக்க கண்ணாடியைத் துடைத்து முடித்து இருந்தான். பின்னர் முன்புற அலங்கார விளக்குகளை எறிய விட்டான். பேருந்து அழகாக இருந்தது; "தினமும் இதுபோல துடைப்பானோ!!!" என எண்ணிக் கொண்டேன். நம்முடைய அரசுப் பேருந்துகள் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை துடைக்கப்படுமோ தெரியவில்லை...
      ஏற்கனவே அந்த பேருந்தைப் புகைப்படம் எடுத்திருந்தேன்; இருந்தும் விளக்கின் ஒளியில் புகைப்படம் எடுக்க முயன்றேன். அவன் பார்த்து விட்டான்; அப்படியே திரும்பிக் கொண்டேன். பின்னால் பயணியர் எச்சரிக்கைப் பலகை வைக்கப்பட்டிருந்தது. "பயணிகள் தங்கள் உடைமைகள் லேப்டாப் பர்ஸ் போன்றவற்றை கவனமாக வைத்துக்கொள்ள வேண்டுகிறோம்; முன்பின் தெரியாத நபர்களிடம் பார்த்துக்கச் சொல்லி கொடுத்து ஏமாந்துவிட வேண்டாம்"- காவல்துறை.
     கோகுல் அழைத்தான்; அமர்ந்திருந்த இடத்தினை அடையாளம் சொன்னேன்; "கோயமுத்தூர்ல இருந்து வர்ற பஸ்லாம் நிக்குற இடத்துக்கு லெஃப்ட் சைட்ல, குமரன் பஸ்ஸுக்கு oppositeல பிளாட்ஃபார்ம்ல உட்காந்து இருக்கேன்". சொல்ல மறந்துட்டேன் அந்த பேருந்தின் பெயர் 'குமரன்' சேலம்-ஈரோடு வழித்தட பேருந்து. ம்ம்ம் கோகுல் சரியாக வந்துவிட்டான்.
      அவனைப் பார்த்த பின்பு மகிழ்ந்தேன். பத்திரமாக கொடுத்துவிட்டு வந்து சேர்ந்திருக்கிறான்.  இருவரும் அவரவர் உடைமைகள் எடுத்துக் கொண்டோம். ஆத்தூர் செல்லும் பேருந்தில் ஏறிக்கொள்ளப் போனான். "பாக்கலாம் bye..." "bye..." மீண்டும் கல்லூரியின் நண்பர்களின் நினைவு வந்து புகுந்தது. மீள்வேன் என்ற நம்பிக்கையில் ஒரு "இந்தியா டுடே"வை வாங்கிக் கொண்டு பழைய பேருந்து நிலையம் செல்லும் பேருந்தைப் பிடிக்க வெளியே நடந்தேன்...
      பலவித மனிதர்கள், பலவித வாழ்க்கைகள், பலவித உணர்வுகள்... இந்த உலகம் பிரம்மிப்பூட்டுகிறது; பிரம்மித்துக்கொண்டே வாழ்வோம்...
      (கதையே இல்லாத இக்கதையைப் படித்து உங்கள் நேரத்தை வீணடித்ததிற்கு மன்னிப்புகளும் நன்றிகளும்... )

No comments:

Post a Comment