Monday, June 02, 2014

பெயரற்றவன்

     சராசரிகளுள் சிறந்த சராசரியாக ஆக வேண்டும், இதுவே இன்றைய சராசரிகளின் "உயர்ந்த குறிக்கோள்".
     ஒவ்வொரு சராசரி பிறக்கும்போதும் அவனுள்ளேயே ஒரு அபூர்வவாதியும் பிறக்கிறான்.
      ஆனால்,
      "நீ சராசரி தான்" என்று அவனை நம்பவைக்கின்றது இந்த சராசரி உலகம்.
       "ஆம், நானும் சராசரி தான்" என்று அவனும் காலப்போக்கில் நம்பி சராசரியாகவே மாறுகிறான்.

       சிலர் மட்டுமே தன்னுள் இருக்கும் அந்த அபூர்வவாதியைக்  கண்டுகொள்கின்றனர்.
      
       கண்டு கொண்டவர்களிலும் சிலர் பயந்து சராசரி ஆக மாறிவிடுகிறார்கள்.
       மிகச்சிலரே சராசரிகளிலிருந்து துணிந்து விடுபட்டு அபூர்வமானவர்கள் ஆகிறார்கள்.
       "சராசரியாக வாழ்வதே நிறைவாகத்தானே உள்ளது" என்று சில சராசரிகள்.
      
      "சராசரியாக வாழ்வதே மிகப்பெரும் போராட்டமாக உள்ளது" என்று சில சராசரிகள்.
     சராசரியாக வாழ்வது தான் சரி; அதுவே இயல்பு; என்றும் ஆக்கிவிட்டனர் சராசரிகள்.
      தனக்குள் இருக்கும் அபூர்வத்தைத் தலையெடுக்க விடாமல் தட்டித்தட்டிக் கொன்று புதைத்தே விடுகின்றனர், சராசரிகள்.
      சராசரிகள் ஒரு நாளும் அபூர்வவாதிகள் ஆகி விடக் கூடாது என்று சில அபூர்வவாதிகள், சராசரிகளை முடக்கியே வைத்துள்ளனர்.
      "மிகச்சில அபூர்வவாதிகள்-மிகப்பல சராசரிகள்" இது இவ்வுலகின் சாபக்கேடாகி விட்டதோ...
      "மிகப்பல அபூர்வவாதிகள்-மிகச்சில சராசரிகள்" என்று மாறினால் உலகம் உய்த்து விடுமோ என்னவோ!!!
      விந்தை என்னவென்றால் சிலருக்கு சராசரியாக வாழவும் பிடிக்கவில்லை; அவரவர்க்குள் இருக்கும் அபூர்வவாதியையும் கண்டுகொள்ள முடியவில்லை.
      அப்படிப்பட்டவர்களுக்கு என்ன பெயர் வைப்பது எனத் தெரியவில்லை.
      நல்ல பெயருக்காகக் காத்திருக்கிறேன்; எனக்கு நானே சூட்டிக்கொள்வதற்காக...
   
                          ஆவலுடன்,
                        பெயரற்றவன்.

No comments:

Post a Comment